எண்ண முகில்கள்

காலப் பதிவுகளின் கோலத் தமிழ்!!

 
முகில்கள்
அறிவித்தல்
வானொலி
இலண்டனில் இருந்து ஐபிசி தமிழ். நேரடி ஒலிபரப்பு.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
Other things
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit. Duis ligula lorem, consequat eget, tristique nec, auctor quis, purus. Vivamus ut sem. Fusce aliquam nunc vitae purus.
பாம்பின் கை பாம்பறியும்! (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்)
Sunday, July 27, 2008
இளமைக் காலக் குறுகுறுப்புக்களும் கலகலப்புக்களும் மனித வாழ்க்கையின் மகத்தான அத்தியாயங்கள்.

கிழமை நெருங்கி வரும்போது மன இளமையைக் காத்துக் கொள்ள அவைதான் பெரிதும் உதவுகின்றன.

அனுபவங்களின் ஆரம்பப் படிகளில் நின்று கொண்டு, எதையும் எப்படியாவது செய்து விடத் துடிக்கும் துறுதுறுப்பு நிறைந்த அந்தக் காலம்தான் மனித வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை முதல் அத்தியாயமாக நம் ஒவ்வொருவரினதும் சரித்திர நூலில் எழுதி வைத்துக் கொண்டிருக்கின்றது.

எத்தனையோ விதமான அனுபவங்கள், இன்பங்கள், துன்பங்கள், மன உளைச்சல்கள், சந்திப்புக்கள், இனிமைகள், கவலைகள்!

கொஞ்சக் காலமே இருக்கும் அந்தப் பருவம் மாறி இல் வாழ்க்கை என்றும் வயதிற்கேற்பவும் சிந்தனைக்கேற்பவும் வேறு விதங்களிலும் விடை பெற்ற பிற்பாடு, ஒரு பெரிய, அரிய மகிழ்ச்சியை இழந்து விட்ட துக்கம் நம்மை அவ்வப்போது உறுத்துவதுண்டு.

வளர வளர வாழ்க்கையின் புது அத்தியாங்கள் தொடரத் தொடர மனிதன் தன்னையும் அறியாமல் அவ்வப்போது அந்தப் பசுமைக்கால அனுபவங்களை அசைபோட்டு, அதில் இலயிப்பதில் இருந்த சுவையை உணர்ந்து, அனுபவிப்பதில்தான் தற்போதைய வாழ்க்கையின் அழுத்தத்துக்கு அவன் ஆறுதல் தேடுகிறான்.

எனக்கு இப்படியான அனுபவ உணர்வுகள் அடிக்கடி ஏற்படுவதுண்டு. வெளிநாட்டு வாழ்க்கையின் தனிமை உணர்வு கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

எனது கடந்த காலங்களின் சில சிரிப்பூட்டும் சம்பவங்களை நான் என் மனைவி பிள்ளைகளுடன் இருக்கும் போது சொல்லிச் சிரித்து மகிழ்வதுண்டு.

என்னைப் பார்த்து எனது பிள்ளைகள் அப்போது சிரிக்கின்ற சிரிப்பு இருக்கின்றதே! அது கோடி பெறும்.

இனிக் கதைக்கு வருவோம்.

எனக்குப் பதினைந்து வயதிருக்கும். கொழும்பு மாநகரில் டவர் டாக்கீஸ் என்ற ஒரு திரைப்பட மண்டபம் இருந்தது. (தற்போது அதைக் கலாலயமாக அரசு மாற்றியிருப்பதாகக் கேள்வி).

அந்த வயதில் இந்த அடல்ட்ஸ் ஒண்லி (Adults Only) என்ற வார்த்தை இருக்கிறதே! அதற்கு ஏகப்பட்ட மவுசு இந்த வயதுகளுக்கு மத்தியில் உண்டு.

உலகமறியாத வயதினிலே படங்களுக்கு, அதுவும் ஆங்கிலப் படவிளம்பரங்களுக்குக் கீழே இந்த வார்த்தைகளைக் கண்டு விட்டால் போதும், விளம்பரப் போஸ்டரையே பிய்த்து விழுங்கிவிடும் சென்னைத் தெருவோர மாடுகளைப்போல ஆதங்கத்தோடு அவற்றினருகில் அந்த வயது இளசுகள் நடமாடுவதுண்டு.

இளசுகளுக்குத்தான் இந்த நிலை என்றால் கிழடுகளைக் கேட்க வேண்டுமா? சமுதாயச் சட்ட திட்ட இறுக்கங்களால் கவர்ச்சிக் காட்சிக்கு வழிகளின்றி, ஏங்கி நிற்கும் பல மறுவுலக டிக்கட் வயது வரிசைவாசிகளும் இதில் அகப்பட்டுத்தான் இருந்தார்கள்.

எங்கள் குழாமில் சுமார் ஒன்பது பேர் இருந்தோம். ஒன்றாகவே எங்கும் போவதும் வருவதும் எங்கள் வழக்கம். அன்றொரு நாள் என் வகுப்பில் ஒரு செய்தி பரவிக் கொண்டிருந்தது.

வெள்ளவத்தை சவோய் தியேட்டரில் ஒடிக் கொண்டிருந்த ஒரு அடல்ட்ஸ் ஒண்லி படம் இந்த வாரம் டவர் டாக்கீசுக்கு வருகிறதாம்.

முழு வகுப்பிலும் ஒரே பரபரப்பு. எங்கள் குழுவோ ஏகப்பட்ட ஆர்வத்தில் திளைத்தது. அன்று மாலையே எங்கள் படை துவிச்சக்கர வண்டிகளில் தியேட்டரை வட்டமிட்டது.

போஸ்டரில்…

“என்னடா ஒரே ரோமன் படைகள் மாதிரி இருக்குது? இதுக்கு ஏன் அடல்ஸ் ஓண்லி?"

ஒருவன் தனது சந்தேகத்தை முன் வைத்தான்.

“டேய் சும்மா அப்புடி இப்புடிக் காட்டாமல்..... வந்து பாரடா என்றுதான் போடவில்லை”

ஒரு குறும்பன் பதிலிறுத்தான் சிரிப்புடன்.

எல்லார் மனதிலும் ஏதோ ஓர் எதிர்பார்ப்பு. சரியாகத் தெரியாவிட்டாலும் ஆர்வம் மட்டும் குறையவில்லை.

போஸடர் படத்தின் ஒரு மூலையில் ஒரேயொரு பெண்ணுருவம் மெல்லிய கண்ணாடிச் சீலையுடன் கால் தெரிய…

எங்கள் எல்லார் மனங்களையும் கிள்ளி விட்டுக் கிளுகிளுப்பூட்டியது அந்தப் படம். நேராகப் பார்க்கத் துணிவில்லாமல் கடைக்கண்ணால் பார்ப்பதும் பார்க்காத மாதிரி நடிப்பதுமாக ஒரே.. குளுகுளுகுளு.

ஒருவருக்கொருவர் ஏதோ காணக் கூடாததைக் கண்டு விட்டவர் போல மற்றவர்களுக்குக் காட்டிக் கொண்டுஇ கடைக்கண்ணால் ரசித்துக் கொண்டு மீண்டும் அங்கிருந்து பறந்தோம்.

இரண்டு நாட்களில் படம் வரும். சுமார் 8 கி.மீ. தூரம். பஸ்ஸில் போய்விடலாம். ஆனால் படம் முடிந்து வீடு திரும்பும்போதுதான் பிரச்சினை.

நடந்தேதான் வீடு திரும்ப வேண்டியிருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால் பஸ்ஸொன்று வரும். அதைத் தவற விட்டால் வேறு வழியே கிடையாது.

இரவு 9.30 மணி காட்சிக்குத்தான் போக வேண்டும். ஆறரை மணிக் காட்சிக்கு போனால் தெரிந்தவர்கள் யாராவது நுழைவுச் சீட்டு வரிசையில் நிற்பதைக் கண்டு வீட்டுக்கு “டிப்” கொடுத்து விட்டால் எலும்பு முறியுமே! என்று எல்லாருக்குமே அச்சம். ஆகவே தூர நடை என்றாலும் பரவாயில்லை. லேட் ஷோவே பாதுகாப்பு என்று முடிவாயிற்று.

அதன் பிறகுதான் இன்னொரு புதிய பிரச்சினை பற்றிய ஐயத்தை ஒருவன் கிளப்பினான்.

“டேய் நாமெல்லாம் பதினாறு வயசு பசங்களாயிற்றே! பதினெட்டு வயதுக்கு மேலே இருந்தால்தானே உள்ளே விடுவான்?”

மீண்டும் குழு கூடிக் கொண்டது.

“நான் என் அக்காவின் கண்மை டப்பாவைக் கொண்டு வருகிறேன்.எல்லோரும் மீசை வரைந்து கொள்ளலாம்.”

பெரிய அறிவாளி போன்று நான் ஐடியா சொன்னேன்.

“டேய் அங்கே வருகிற கூட்டத்தில் நெருக்கியடித்துக்கொண்டு போகும்போது வியர்த்துக் கொட்டும். உன் மீசை அப்பபடியே வடிந்து போய் வாயால் வழியும். பிறகு தியேட்டர்காரன் கழுத்தைப் பிடித்து வெளிய தள்ளுவான் அல்லது பொலிஸ்காரன் கையிலே பிடித்துக் கொடுப்பான்.அதைவிட படம் பார்க்கப் போகாமலே இருந்துவிடலாம்.”

அவ்வளவுதான்! அறிவுப் பெட்டகம் அப்படியே அழுங்கிக் கொண்டது. (நான் தான்)

யோசித்துஇ யோசித்து ஒன்றும் சரிவரவில்லை. கடைசியாக எல்லாரும் ஒன்றாகவே போவது. ஒருவனுக்கு அனுமதி கிடைக்காவிட்டாலும் எல்லாரும் திரும்பி விடுவது என்று முடிவெடுத்தோம்.

கிடைக்கும் டிக்கட்டை மீண்டும் விற்று விடுவதில் சிரமமிருக்காது என்பது எங்களுக்குத் தெரியும்.

அடல்ட்ஸ் ஒண்லி அறிக்கையின் பெருமை அப்படிப்பட்டது. ஆகவே பணத்துக்குக் காப்புறுதி உறுதி.

பட்டுப்போகப் போகும் படுகிழவர்களையும் பதுங்கி நுழைய முற்படுத்தும் மந்திரக் கோல் போன்றது அந்த அடல்ஸ் ஒண்லி போர்டு.

ஆகவே பெருங் கூட்டம் டிக்கட்டுக்காக அலை மோதப் போவது உறுதியிலும் உறுதியென்று எங்களுக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது.

படம் திரையிடப்பட்ட இரண்டாம் நாள் சனிக்கிழமை. மாலை ஐந்து மணிக்கெல்லாம் எல்லாரும் ஒன்று சேர்ந்து விட்டோம்.

“மொத்தமாக ஒரே பொய்யைச் சொல்ல வேண்டும். இல்லையென்றால் ஒருவன் அகப்பட்டால் அவனால் எல்லாருக்குமே ஆபத்து” என்று எங்களில் ஒரு மேதாவி மொழிந்த தத்துவத்தை வேதவாக்காகச் சிரமேற்கொண்டுஇ எல்லாருமே அவரவர் வீட்டில் பின்வருமாறு சொல்லியிருந்தோம்.

“இன்றைக்குக் கந்தையா மாஸ்டர் வீட்டில் வெள்ளையடிக்கிறார்களாம். அவருக்கு இரண்டு மகள்கள் மட்டுமே இருப்பதால் வீட்டை ஒதுக்கி உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். இதனால் அவர் வீட்டுக்குப் போகிறோம். இராத்திரி கொஞ்சம் பிந்தினால் அவரே வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போவாராம்” என்று நாங்கள் விட்ட “வோல்சேல்” கதை எங்கள் வீடுகளில் அம்மாமார்களின் ஏகோபித்த அனுமதியை வாங்க வைத்து விட்டது.

அந்த நாட்களில் ஆசிரியர்களுக்கு பெரும் மதிப்பும் கவுரவமும் இருந்த காலம். எல்லாப் பெற்றோருமே தங்கள் பிள்ளைகளுக்கு ஏதோ வரப்பிரசாதம் கிடைத்து விட்டதைப் போன்ற மகிழ்ச்சியுடன் மாஸ்டரின் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் இனிப்பும் கொடுத்து அனுப்பினார்கள்.

எங்கள் ஐடியா மேதாவியை வாயாரப் பாராட்டிக் கொண்டோம்.

“டேய் கந்தையா மாஸ்டரை மட்டும் நம் அப்பா, அம்மா யாரும் சந்தித்துவிடாமல் பாத்துக் கொள்ள வேண்டும். விஷயம் தெரிந்ததோ! அவரும் உதைப்பார். வீட்டிலேயும் நவராத்திரி பூசை நடக்கும். ஜாக்கிரதை.”

நமது மேதாவியே இரண்டாவது அறிவுரையையும் தந்தருள் புரிந்தார். ஆமைகள் போல அனைவரும் தலைகளை ஆட்டிக் கொண்டோம். உண்மைதானே!

இரவு ஏழு மணியளவில் அந்நாளைய பழங்கால லண்டன் டபுள்டெக்கர் பேருந்தில் கொட்டாஞ்சேனையிலிருந்து பேருவகையுடன் எங்கள் குழு புறப்பட்டது.

தியேட்டருக்கு எதிர்ப்புற தரிப்பிடத்தில் பஸ் நின்றபோது, நான் தியேட்டர் பக்கம் திரும்பிப் பார்த்தேன். கூட்டமோ கூட்டம். அப்படியொரு கூட்டம்.

டிக்கட் வழங்கவே இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறதே! அதற்குள் இவ்வளவு கூட்டம் என்றால் இன்னும் அரை, ஒரு மணி நேரத்தில்?

பெரிய பரபரப்பாக இருந்தது எங்களுக்கு.

“சரிவராதடா இன்றைக்கு. இன்னொரு நாள் வருவோம்” ஒருவன் சொன்னான்.

“மடையா! இன்னொரு நாளும் கந்தையா மாஸ்டர் வெள்ளையடிப்பாராடா?”

முதல் குரல் அமுங்கிவிட்டது.

“இப்போ என்னடா செய்வது?”

“டேய! நேரத்தோடே வீட்டுக்குப் போனாலும் விபரம் கேட்பார்கள். பிந்திப் போவது என்றாலும் எங்கே போய் சுற்றுவது? அதைவிட பேசாமல் இப்போதே போய் நாமும் நின்று கொள்வோம். அதுதானடா சரி.”

ஓர் இடை அறிவாளி விடுத்த அந்த அறிக்கையை எல்லாருமே ஏகமனதாக அங்கீகரித்தோம்.

வீடு திரும்ப யாருக்கு எண்ணம்? எல்லாருமே அடல்ஸ் ஒண்லி ஆர்வலர்களல்லவா!

“ஆமாமடாஇ அதுதான் சரி. எல்லாரும் போய் க்யூவிலே நின்று கொள்வோம்.”

கலரி ஐம்பது காசு. இரண்டாம் வகுப்பு 1.10 என்று அறிவிப்பு தெரிந்தது.

“டேய்இ டேய் கலரி சீப்டா. அதுக்குள்ளே புகுவோம்.”

“அடேய்! அதிலே ஒரே ரவுடிகள்தானடா இருப்பார்கள். நம்மை உதைத்து விரட்டி விட்டு அவன்கள் புகுந்து கொள்வான்களடா!“

“அப்பபடியென்றால்? எல்லாருமே வண் டென்னுக்கு (ஒன்று பத்துக்கு -அதாவது இரண்டாம் வகுப்புக்கு-) போவோம்.”

“ஆமாம், அதுதான் சரி.”

எல்லாரும் க்யூவை நெருங்கினோம். கலரியில் ஒரே அடி பிடி மாதிரி சத்தமும் நெருக்குதலும்.

இங்கே அப்படிச் சத்தம்தானில்லையே தவிர, ஏகப்பட்ட நெரிசல்.

பலம், சொத்தி, இளம், கிழடு என்று பலரகப்பட்ட பலகாரங்களும் எங்கள் க்யூவில் நெருக்கியடிக்க, எங்கள் குழுவும் நன்றாகப் புகுந்து கொண்டு, வளைந்து நெளிந்தவாறே காத்து நின்றது.

அத்தியேட்டரின் முகப்பிலிருந்த கடிகாரத்தை அடிக்கடி கண்கள் பார்ப்பதும் “இன்னும் கொஞ்ச நேரந்தான், இன்னும் கொஞ்ச நேரந்தான்” என்று ஆறுதல் சொல்லிக் கொண்டு பொழுதைக் கழிப்பதுமாக நின்று கொண்டிருந்தோம்.

கந்தையா மாஸ்டரின் பிள்ளைகளுக்காக வீடுகளில் தந்துவிட்டிருந்த இனிப்புக்கள் நேரப் போக்கிற்கு நன்றாக உதவிக் கொண்டிருந்தன.

அப்போது தான்….

ஒரு வண்டியில் கொண்டைக் கடலை அங்கே வந்து நின்றது. ஒரு அலுமினியத் தொட்டி போன்ற சட்டியில் சுடச்சுடக் கடலை. அடியில் ஒரு அடுப்பு எரிந்து கொண்டிருக்கஇ கடலைக்காரர் பேப்பர் சுருளில் எடுத்து எடுத்து சுடச் சுட வழங்கிக் கொண்டிருந்தார்.

எங்களுக்கும் வாய் ஊறியது. அந்த நெருக்கடிக்கிடையில் அதை ருசிப்பதிலும் ஓர் இன்பம் இருப்பதாக உணர்ந்ததால் நாங்களும் கடலை வாங்க முற்பட்டோம்.

அந்த வண்டியையே புரட்டி விடுமாப்போல நாலா பக்கங்களிலிருந்தும் கைகள் நீட்டிக் கொண்டிருக்க, கடலை வியாபாரி சாவகாசமாகவும் இலாவகமாகவும் விற்பனையில் மூழ்கியிருந்தார்.

நானும் எனது கையை நீட்டி, ஒரு சுருளுக்கு ஆர்டர் கொடுத்துக்கொண்டு இருக்கும் போதுதான்.….

ஒரு பாம்புக் கை கடலை வண்டிப் பக்கமாக நீண்டது தெரிந்தது.

இது என்னடா? இது நமக்குத் தெரிந்த கை மாதிரி இருக்கிறதே!

என் மனம் பக்பக்கென்று அடித்துக் கொண்டது. உறுதிப் படுத்த அவசியமே இல்லை.

பாம்பின் கால் பாம்பறியுமாமே! அந்தப் பாம்பின் கையை மட்டும் இந்தப் பாம்புக்குப் புரியாதோ?

யாருடைய கை அது என்று நினைக்கிறீர்கள் நீங்கள்?

சாட்சாத் என் அப்பாவினுடைய கையேதான் அது.

அந்த கோடைக்கால சூட்டிலும் எனக்குள் வின்ட்டர் குளிர் வீசத் தொடங்கிவிட்டது.

மிக மெல்லிய குரலில் அருகிலிருந்த நண்பனிடம் சொன்னேன்.

“டேய்! என் அப்பாவும் வந்திருக்கிறராரடா! பேசாமல் கலரிக்குப் போயிருந்தால் தப்பியிருப்போம். இப்ப என்னடா பண்ணுவது?” எழுபது வயது தாத்தாவின் குரல் போல எனது சொற்கள் தத்தளித்தன.

“அவர் உன்னைப் பாத்தாராடா?”

“அப்படித் தெரியவில்லை!”

“அப்போ ஒன்று செய். எனக்குப் பின்னாலே ஒளிந்து கொள். நான் மறைத்துக் கொள்கிறேன். உன் அப்பாவுக்கு என்னை சரியாகத் தெரியாது.”

ஆபத்பாந்தவன். அன்பான நண்பனை ஆபத்தில் அறி என்று படித்தோமே! அது சரிதான்.

டெங்கு காய்ச்சல் பேஷன்ட் மாதிரி நானும் அவனுக்குக் கீழ்ப்படிந்து பதுங்கிக் கொண்டேன்.

டிக்கட் எடுத்த பின் சிறிது தூரம் கடந்துதான் தியேட்டர் உள் வாயிலை அடைய வேண்டும்.

இந்த டென்சிங் இமயமலை ஏறினாராமே! அவர் பட்டிருக்கக்கூடிய சிரமம் என்ன சிரமம்?

நானல்லவா அன்று அப்படியொரு…

அன்றைய எனது இமயமலை உச்சியின் தூரம் சுமார் பதினைந்தடி மட்டுமே! ஆனாலும் டென்சிங் தோற்று விட்டார் போங்கள்.

என் நண்பனுக்குப் பின்னால் என்னை மறைத்தவாறே டிக்கட் கிழிப்பவரை நெருங்கினேன். எங்களை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார் அவர்.

சில கணங்கள் எங்களுக்குள் ஒரே கிடுகிடுகிடு.

பிறகு என்னவோஇ அந்தக் கர்ணபிரான் உள்ளே செல்ல வழி விட்டார். பாய்ந்தோடி நுழைந்தோம்.

எங்கள் துரதிர்ஷ்டம் ஒன்றாக அமரும்படியாக ஒரே வரிசையில் ஆசனங்களே காலியாக இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகவே இருந்தன. அதற்குள் மேலும் மேலும் கூட்டம் நுழையத் தொடங்கவே, கிடைத்த இடத்தில் இடம் கிடைத்தவன் இருந்து கொண்டான்.

நாங்கள் மூன்று பேர் மட்டும் இடம் தேடி அரை இருட்டில் அலைந்து கொண்டிருந்தோம்.

ஒருவன் ஒரு சீட் பிடித்து அமர்ந்து விட்டான். சிறிது கழித்து மற்றவன் ஓடி வந்தான்.

“டேய் அங்கே ஒரு சீட் இருக்கிறது!”

“எங்கேடா?”

“அதோ பார்.”

நான் பார்த்தேன்.

ணொங்ங்ங்ங்…

ஒரு முனியாண்டி சாமி சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டிருந்தார். அவருக்கருகில்தான் ஒரு சீட் காலியாக இருந்தது. அதற்குள் இன்னொரு சீட்டைத் தேடிக் கூட நின்றவனும் ஓடிப்போய் அமர்ந்து கொண்டான்.

எனக்குள்.… ஏதோ புளியைக் கரைக்குமாமே! அப்படி இருந்தது. எதனால் தெரியுமா?

அந்த சுருட்டுக்குரிய முனியாண்டிசாமி வேறு யாராகவுமல்ல, என் அப்பாவாக இருந்ததால்தான்.

கடைசி சீட் பிடித்த நண்பனிடம் ஓடினேன். கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்சியும் அவன் எழும்பவே முடியாதென்று மறுத்து விட்டான்.

தன்னை அடையாளம் கண்டு கொண்டுஇ அவனது அப்பாவிடம் இவர் ஏதாவது சொல்லி விட்டால்? தற்காப்புக்கு வேறு வழியே இல்லையே! அவன் நிலைமை அப்படியாக இருந்தது.

எனக்கு? ஆப்பிழுத்த குரங்கு நிலை இதற்கு எவ்வளவோ மேல்.

என்னால் ஆனமட்டும் இருட்டை ஊடுறுவிஇ ஊடுறுவி வேறொரு இடம் தேடினேன் கண் வலித்ததுதான் மிச்சம்.

முதலாம் மணி அடித்து விட்டது. விளம்பரங்கள் ஓடத் துவங்கின. இருட்டு இன்னும் அதிகரித்தது.

இரண்டாம் மணி அடிக்க சில விநாடிகள் இருக்கும். தியேட்டரில் பணிபுரியும் ஒருவர் கையில் டார்ச் லைட்டுடன் நான் நின்று கொண்டிருப்பதை அவதானித்துவிட்டு, நெருங்கி வந்து கொண்டிருந்தார்.

கழுத்து அறுபடப் போகிற ஆடு, தான் கட்டப்பட்டுள்ள கயிற்றை அறுத்துக் கொண்டோடப் படாத பாடு படுமாமே! அப்படியொரு நிலைமை. ஆனால் எங்கேதான் ஒடுவது?

பாவி ஏதாவது வேறிடத்தில் இடம் பிடித்துத் தர மாட்டானா என்ற நப்பாசையுடன் நான் நிற்கவும் கடைசி மணியொலியுடன் படம் துவங்கவும் சரியாயிருந்தது.

வந்த டார்ச் லைட் என்னருகில் வந்து என்னை அழைத்தது. வேறு வழி?

பின்னாலேயே சென்றால்… பாவி என் அப்பா அருகிலேயா கொண்டு போய் நிறுத்துவான்?

படக். பட. பட.

டங்டிங்டுங்

புங்பிங்புங்

எனக்குள் ஏகப்பட்ட பிசாசுத் திரைப்படங்களின் பயங்கர இசையொலிகள் நிறைந்து ஒலித்துக் கொண்டிருந்தன.

சில விநாடிகள் அப்படியே கழிந்தன.

இருட்டிலே அப்பாவுக்கு என்னைத் தெரிய வாய்ப்பில்லை. அதனால் அப்படியே இருந்து விட்டு, இடைவேளை லைற் போடுமுன் எழுந்து மாறிவிடுவோம் என்று தீர்மானித்தவாறே கடல் கன்னி ஸ்டைலில் வளைந்து, அந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டேன்.

“ஆண்டவனே! ஒரு கெட்ட காட்சியும் அதுதான் இந்த நாசமாய்ப் போகிற அடல்ஸ் ஒண்லி காட்சிகள் எதுவுமே வந்திடக் கூடாது. இந்த அப்பா அடித்தாரென்றால் இரும்படிதான். அதனாலே… கடவுளே! ஆடல்ட்ஸ் ஒண்லியைக் குழந்தைகள் ஒண்லியாக தயவு செய்து மாற்றி என்னைக் காப்பாற்றும்.”

கதை வசனங்களோ காட்சிகளோ தலைக்குள் நுழையவே முடியாத சித்திரவதை நிலையில் நானிருந்து கொண்டிருந்தேன்.

அப்போதுதான் அந்தப் புதுமை நடந்தது.

"படம் பாக்க வந்தாயா?“

ஒரு மின்சாரக் கம்பமே சரிந்து, என் மேலே விழுந்து விட்டது போன்ற அதிர்ச்சி.

ஆனால்…கோபத்துக்குப் பதிலாக ஒருவித மென்மை தெரிகிறதே! என்னடா இது?

பயத்துடன் வியப்பும் எனக்குள் புகுந்து கொண்டது.

கிணற்றடியில் வைத்து குளிக்கவா வந்தீர்கள் என்று கேட்டால்? மொக்குத் தனமான கேள்வியல்லவா? அதுவும் படத் தியேட்டருக்குள் வந்து இருந்து கொண்டு, படம் துவங்கும்போது படம் பார்க்கவா வந்தாய் என்று கேட்கின்றாரே!

ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டவர்? எனது அப்பாவல்லவா!

எப்படி....எடுத்துரைப்பேன்?

"ம்“

ஒரே எழுத்தில் பதில் சொல்லி விட்டேன். தமிழன்னையே அநநேரம் விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.

ஒரு சிறிய கனைப்பின் பிற்பாடு, அதே குரல் சிறிது கம்மியாக மீண்டும் ஒலித்தது.

"சரி... நான் படம் பாக்க வந்திருந்ததாக அம்மா கிட்டே சொல்லி விடாதே! என்ன?“

குற்றவாளியைப் பிடிக்க வேண்டிய போலீஸ்காரரே குற்றவாளியிடம் அபயம் கேட்பதா?

அடி சக்கை. நடக்கக் கூடிய காரியமா இது?

ஐரேபாப்பவில் அகதி அந்தஸ்து கோரிட, சம்பந்தா சம்பந்தமில்லாத அறிக்கைகளை விட்டு விட்டு முழிப்பவரைப் போலில்லை?

அநியாயம் சொல்லப்படாது. கடவுள் இரக்கமுள்ளவர்தான். நான் கேட்டுக் கொண்ட வேண்டுகோள் உடனடியாகவே ஏற்கப்பட்டு விட்டது போலத் தெரிகிறதே!

எந்த பதிலும் சொல்லாமல் நான் அமைதியாகவே இருந்து கொண்டேன்.

எத்தகைய காட்சிக் கனவுகளோடே தியேட்டருக்குள் நுழைந்தேனோ, அப்படியான காட்சிகளேதுமே இல்லாமல் படம் ஓடிக் கொண்டிருந்தது. இருந்தாலும் உள்ளுக்குள் ஒரே தடபடதடபடதான்.

மனதிலிருந்து, எதிர்பார்த்து வந்தவை எதுவும் எதிர்ப்படவே கூடாது என்று இறைவனிடம் ஒரே வேண்டுதல்தான்.

ஒரேயொரு காட்சியில் மட்டும் அடிமைப்பட்டுவிட்ட கதாநாயகனிடம் ஒரு பெண் அனுப்படுவதும் அவள், அவன் முன் தனது ஆடையைக் களைவதுமாக… அவளது முதுகுதான் தெரிந்தது. அதற்குள் நான் சீட்டுக்கடியில் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பா? யாருக்குத் தெரியும்?

அன்று வயதுக் கோளாறினால் தியேட்டருக்குள் புகுந்து விட்டு, பட்ட பாடு! போதும் போதும் என்றாகி விட்டது.

இடைவேளை வந்தது. இனி எழும்பி ஓடி என்ன பயன்?

கற்சிலை போல இருந்து கொண்டிருந்தேன்.

எனது நண்பர்கள்?

ஒரு பயல் கூட அந்தப் பக்கம் வரவே இல்லை. பொந்துக்குள்ளிருந்து நரிக்குப் பயந்த முயல்கள் எட்டிப் பார்ப்பதைப் போல…


படுபாவிகளே! சரியாக மாட்டி வைத்துவிட்டு பதுங்கவா செய்கிறீர்கள்?

செங்கதிர் சுடர்போலே என்கரம் நீண்டிருந்தால்…
ஒவ்வொருத்தன் கழுத்தையும் – உங்கள்
ஒவ்வொருத்தன் கழுத்தையும்..
இங்கிருந்தே நெரிப்பேன்...

இடைவேளை ஆரம்பித்ததுடன் அப்பா வெளியேறியதைக் கூட நான் கவனிக்கவில்லை என்பதை அவர் அது முடிய திரும்பி வந்து அமர்ந்த போதுதான் நான் உணர்ந்தேன்.

குற்றவுணர்வுகள் உடம்பின் இயக்கத்தையே தடுத்துத் தடுமாற வைத்து விடுகின்றனவே!

“இந்தா சாப்பிடு” திரும்பிப் பார்த்தேன்.

ஐஸ் சொக்!

"ஹாட் அட்டாக்“ அளிக்கும் அடுத்த அதிர்ச்சி.

அப்பா என்ற அந்த மேகம் ஐஸ் சொக்காக அன்பு மழை பொழிகிறதே!

அதுவும் அடல்ட்ஸ் ஒண்லி ஆபத்துணர்வில் அங்கமெல்லாம் அஞ்சி நடுங்கும் இந்த நேரத்திலே! ஏனாம்? புரியவேயில்லை.

இயந்திரத் தலையாக உயிரின்றி எனது முகம் திரும்பியது.

ஐயா ஐஸ் வேறு வைக்கிறாரே!

வேறு நேரமாயிருந்தால்... அப்பா கழுத்தில் இந்நேரம் இந்த உடலம் தொங்கிக் குதித்திருக்கும்.

“நீங்களெல்லாம் எப்படி வீட்டுக்குப் போகப் போகிறீர்கள்? பஸ்ஸிலேயா?”

என் மீதுதான் எத்தனை அக்கறை என் அப்பாவுக்கு.

அப்பாடா!

அது சரிஇ பன்மையில் இழுக்கிறாரே! மற்றவர்களையும் பார்த்து விட்டாரா?

பலே! நம் கிழட்டு ஜேம்ஸ் பொண்ட் அப்பா வாழ்க!

“ஆம்”

இப்போது ஓரெழுத்து முதல் பதில் இரண்டெழுத்து இரண்டாம் பதிலாக எனது உதடுகளிலிருந்து விழுந்தது.

“படம் முடிந்ததும் டக்கென்று பஸ் ஸ்டாண்டுக்குப் போய் விடுங்கள். இல்லையென்றால் பஸ் நிறைந்துவிடும். உங்களை ஏற்றாமலே போனாலும் போய்விடும். கவனம்.”

“சரியப்பா”

அக்கறையோடே வழி சொன்ன அப்பா தனது ஐஸ் சொக் பாசத்தின் அடிப்படையை அப்போதுதான் விடுத்தார்.

“நான் இரவு வேலைக்கு வந்தேனல்லவா? கொஞ்சம் நேரம் கிடைத்தது. அதனாலேதான் படம் பாத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். அம்மாவுக்குத் தெரிந்தால் சும்மா சத்தம் போடுவாள். அதனாலே… நீயும் சொல்லாமல்தான் வந்திருப்பாயென்று நினைக்கிறேன். நானும் சொல்ல மாட்டேன். சரியா?”

அதுவரை குளிராயிருந்த ஐஸ் சொக் இப்போது சுடத் துவங்கி விட்டது.

சிவபெருமானே!

இதுவும் உனது நவீன திருவிளையாடலா?

எனக்குத் தலையே சுற்றுவது போல ஓர் உணர்வு.

அடச் சை! அந்த ஆறுமுக நாவலர் இந்த நேரத்தில் இல்லாமல் போய்விட்டாரே! இப்போதிருந்து இதைக் கேள்விப்பட்டால் அழகாகத் திருவிளையாடல் புராணத்துக்கு இன்னொரு புதிய அத்தியாயம் எழுதி வைத்திருப்பாரே! சிவ சிவா!

“சரியப்பா! நான் அம்மா கிட்டே சொல்ல மாட்டேன்.”

அப்பா “அப்பாடா!” என்று பெருச்சு விடுவது இருட்டில் புரிந்தது. நானும் அதே நிலையில்தானே!

சமரசம்… உலாவும்… இடமே… நம் வாழ்வில் காணா.. சமரசம் உலாவும் இடமே…”

படம் முடிய, நெருக்கிக் கொண்டு வெளியேறிய கூட்டத்துடன் அப்பா கலந்து, மறைந்து, பறந்தே விட்டார்.

என் நண்பர்கள் என்னிடம் விசாரித்த போது, முழுக் கதையையும் நான் சொல்ல, எல்லாருக்கும் ஏதோ ஒரு பெரிய நகைச்சுவைப் படத்தையே பார்த்து மகிழ்ந்த மகிழ்ச்சியும் சிரிப்பும். ஒருவருக்குமே ஆபத்தில்லாமல் அனைவருமே தப்பித்துக் கொண்டோமே! சும்மாவா?

ஆனால் எல்லாரும் ஒன்றை மட்டும் ஒரே தொனியில் சொன்னார்கள்.

“டேய்! உன் அப்பாவைக் கண்ட பிறகு, படம் பார்க்கிற மூடே போயிட்டதடா! உனக்கு ஐஸ் சொக் கொடுத்தாரே! அது எதற்காக என்று யோசித்து, யோசித்து படத்தையே மறந்து விட்டோம்.”

அப்பா நாணயமான மனிதர். கடைசி வரை அம்மாவிடம் என்னைப் பிடித்துக் கொடுக்கவே இல்லை.

நான் மட்டும்?

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?

பிழை, பிழை. பூனைக்குப் பிறந்தது புலியாகுமா?

நானும் அவ்வண்ணமே கடைசி வரைக்கும் நடந்து கொண்டேன்.

மியாவ்! மியாவ்!

அந்தப் படத்தின் பெயர் “ஸஸ்பாட்டகஸ்” (Spartakus).

பார்க்கக் கிடைத்தால் பயமின்றிக் குடும்பத்தோடு பாருங்கள்.

அந்நாளைய தியேட்டர்காரர்கள் பொது மக்களை இழுக்க விரித்திருந்த வலைகளில் ஒன்றுதான் கண்ட கண்ட படத்துக்கெல்லாம் இந்த “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்கின்ற விளம்பரத்தைப் போட்டு வந்தது என்பதும் தியேட்டர்காரன் எங்களின் பிஞ்சில் பழுத்த உருவ வளர்ச்சியைப் பார்த்த பிறகும் விரட்டியடிக்காமல் உள்ளே விட்டானே, அது ஏன் என்பதும் கூட இப்போதுதானே தெரிகிறது?


தமிழமுதம்
Thursday, 28 July 2005
posted by Unknown @ 7:23 pm   0 comments
மனிதன் படைத்த கொடிய மிருகமே! நீ என்றைக்குச் சாவாய்?
Saturday, July 19, 2008
மனிதன் படைத்த கொடிய மிருகமே! நீ என்றைக்குச் சாவாய்?


ஒரு தெருவோரமாக நான் நடந்து கொண்டு இருக்கின்றேன். ஒரு குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு ஒரு குழந்தை எச்சில் உணவு மிகுதி இருந்த பொட்டலத்தை எடுத்து அதை நக்குகின்றது. எனக்கு ஓரே அருவருப்பாக இருக்கின்றது.

“சீ! என்ன கெட்ட பழக்கம் இந்தச் சின்னக் குழந்தைக்கு? இந்தச் சின்ன வயதிலேயே இப்படிப் பொறுக்கித் தின்ன விட்டுவிட்டுஇஇதன் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்?"

அதனருகில் நெருங்குகின்றேன்.

“ஏய்! என்ன செய்கிறாய் நீ ? இப்படி எச்சிலையா பொறுக்கித் தின்பது? உன் அம்மாஇ அப்பா கிட்டே கேட்டு சாப்பிடாமல் தெருவிலிருப்பதைச் சாப்பிடுகிறாயே! இதில் ருசி அதிகம் என்றா இப்படிச் செய்கிறாய்?”

எனது பேச்சில் இருந்த ஆணவமும் திமிரும் அகங்காரமும் அடக்கி வைக்க முனையும் மமதையும் எனது பேச்சுக்களினால் துப்பாக்கிக் குண்டுகளாய் அந்தப் பிஞ்சுக் குழந்தையைத் தாக்கி அதை வதைப்படுத்துமே என்பதை நான் உணராமல் இருக்கிறேன்.

ஆனால் அந்தக் குழந்தைக்கு அது...

“என் அம்மா அப்பாவும் நானும் தம்பியும் இரண்டு நாட்களாக சாப்பிடவே இல்லை மாமா!. நான்தான் பசி பொறுக்க முடியாமல் வெளியிலே ஓடி வந்து ஏதாவது கிடைக்குமா என்று தேடிப் பார்த்தேன். இதை அந்த வீட்டிலிருந்து யாரோ கொண்டு வந்து வீசியதைக் கண்டுவிட்டுத்தான் ஒடி வந்தேன். எனக்கு வேறு வழி தெரியவில்லையே மாமா!”

எட்டு வயதிருக்கத்தக்க அந்தப் பாலகன் எனது படித்தஇ திமிர் பிடித்தஇ பணவெறியைத் தனது கள்ளங் கபடமற்ற விளக்கத்தினால் செருப்பாலடித்து உணர்த்துவதை அப்போதுதான் நான் சரியாக உணர்கிறேன்.

எனது கைகால்களே தடுமாறுகின்றன. ஆத்திரம் அன்பாக மாறஇ நான் அதனிடம் கேட்கிறேன்.

“நீ இப்படி வந்தது உன் அம்மாஇ அப்பாவுக்குத் தெரியுமா?”

“இல்லை மாமா! அவர்களுக்குத் தெரியாது. எல்லாரும் சுருண்டு படுத்துத் தூங்குகிறார்கள். என்னாலே முடியாமல்தான் நான் தெருவுக்கு ஓடி வந்தேன்”

“ஏன் அவர்கள் தூங்குகின்றார்கள்?”

“யாரிடமும் சென்று கேட்கத் தெரியாமல்தான் மாமா”

தனது பெற்றோர் தங்களுக்கிடையில் பேசிக் கொண்டதையே அது தனது கருத்தாகத் தெரிவிக்கின்றது என்று புரிகின்றது எனக்கு.

கடவுளே! தனக்குக் கிடைத்த உணவு சரியில்லையென்று வீசியெறியும் குழந்தை ஒரு வீட்டில் இருக்க, எவரோ தின்று விட்டு வேண்டாமென்று வீசியெறிந்த மிகுதி எச்சிலை விரும்பித் தின்னத் தேடியலையுமளவிற்கு இன்னுமொரு குழந்தையை நடுத்தெருவில் அலைய விட்டிருக்கின்றாயே! இது நியாயமா? இது நீதியா? இது முறையா? இது சரியா?

நான் என்னையும் அறியாமல் முணுமுணுக்கிறேன். எனது மனக்குழப்பத்தை அந்தக் குழந்தையே உடைக்கின்றது.

“மாமா எனக்கு ரொம்பவும் பசியாக இருக்கின்றது. நான்...”

நான் பாய்ந்து அதன் கைகளைப் பிடித்துத் தடுக்கிறேன்.

“அதை வீசிவிடு. நான் உனக்கு சாப்பாடு வாங்கித் தருகிறேன்”

அக்குழந்தை என்னை நம்பி அப்படியே நடந்து கொள்கின்றது.

குழந்தையுடன் நான் நடக்கையிலே எனது மனம் சொல்லுகின்றது.

“இந்தக் குழந்தைக்கு வாங்கும்போது அதன் பெற்றோருக்கும் தம்பிக்கும் சேர்த்தே வாங்கிக் கொடுத்து அதை ஆனந்த அதிர்ச்சியில் ஆழ்த்த வேண்டும்”

நான் திருந்தியதாலா அப்படி நினைக்கிறேன்? அல்லவே அல்ல. எனது பைக்குள் காசு இருக்கின்றதே! அதனால். அந்த அறிமுகப்படுத்திக் கொள்ளாமலே எனக்குள் பதுங்கியிருந்த ஆணவத்தினால்.

குழந்தை எனது அபாரமான காருண்யத்தினால் குளிர்ந்து போய்விடுகின்றது. இப்போதுதான் எனக்குள்ளும் மனிதாபிமான உணர்வின் அருமை ஒரு பனித்துளிபோலப் பட்டு எனக்குக் குளிரூட்டுகின்றதை உணர்ந்து கொள்ள முடிகின்றது என்னால்.

“வாஇ நானே உன்னை உனது வீட்டுக்குக் கொண்டு வந்து விட்டு விட்டுப் போகிறேன்”

அந்தப் பச்சைப் பாலகனின் முகம்...

சூரியனுக்குத்தான் அதிக ஒளியுள்ளதாமே! அது பச்சைப் பொய்.

நடந்து கொண்டிருக்கையில் ஒரு நல்ல வாசகம் எனக்குள் கேட்கின்றது.

“தர்மங்களை பிரபலப்படுத்திக் கொண்டு செய்தால் அவை தர்மங்களல்ல. வலக் கரம் செய்வதை இடக் கரம் அறிந்திடாதிருக்க வேண்டும்.”

அப்படியென்றால்....?

பிள்ளையை அதன் வீட்டு வாசலில் விட்டு விட்டுஇ நாம் யாரென்று காட்டிக் கொள்ளாமல் போய்விடுவோம். அதுதான் சரி.

அந்தக் குழந்தையின் எளிய வீட்டின் வாசலில் வைத்துஇ அதனிடம் விடைபெற்றுக் கொள்கிறேன்.

அது கையை ஆட்டி விடை தருமுன் கேட்கிறது.

“மாமா இது போல நாளைக்கும் யாராவது ஒரு மாமா வந்து உதவுவாராஇ மாமா? ஏன் ஒரு பக்கம் எல்லாரும் சந்தோஷமாக இருக்கஇ நாங்கள் இப்படிக் கஷ்டப்படுகிறோம்? அம்மா நேற்று இரவு பசி தாங்காமல் “கடவுளே உமக்குக் கண்ணில்லையா?” என்று அழுதார்களேஇ அந்தக் கடவுள் எங்கே இருக்கிறார் மாமா?”

எப்படி இதற்கு பதில் சொல்வது என்று புரியாமல் என்னையும் அறியாமல் நான் மேலே பார்க்கிறேன். அது சொல்கிறது.

“அம்மாவும் மேலேதான் பார்த்துச் சொன்னார்கள். அவர் மிகவும் உயரத்திலிருப்பதால்தான் சரியாகப் பர்ர்க்கவும் கேட்கவும் அவரால் முடியவில்லை போல. அவராக இறங்கி வந்து பார்த்தால் என்ன? அவருக்கும் பசி வந்தால் ஒன்றும் கிடைக்காது என்று பயமா?”

குழந்தையின் பேச்சில் வரட்டு குதர்க்கமில்லை. அதன் மனதில் பட்ட உண்மையின் பட்டவர்த்தனமே இருந்தது.

எனது பதில்? அதற்கு எனக்குத் திராணியே இல்லாமல் நான் கையை அசைத்து விட்டு நகர்கிறேன். பாம்புக்கு அஞ்சி விலகி ஓடுகின்ற அச்சம் என்னில். ஆம்இ உண்மையின் பலமான அடியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாமலே நான் விலகி ஓடுகின்றேன்.

எரிக்கும் உணர்வுகளுடன் என் உள்ளம் உரைக்கின்றது.

"இறைவா! வறுமை உனது தவறல்ல என்றும் இந்த மனிதர்கள் விதைத்து வளர்த்துவிட்ட பாதக அமைப்பு என்றும் எப்படி என்னால் அக்குழந்தைக்கு விளக்கிப் புரிய வைக்க முடியும்.

நீ புதுமைகள் செய்வதாய் மதவாதிகள் ஏகப்பட்ட கதைகளைச் சொல்லிக் கொண்டுஇ தமது மதங்களைப் பரப்பி வளர்த்திட முயன்று கொண்டு இருக்கிறார்களேஇ நீ ஒரே ஒரு புதுமையை மட்டும் செய்து காட்டினால் என்ன?

இந்த மனிதன் படைத்துவிட்டிருக்கும் துர்ப்பாக்கிய மிருகமான வறுமையை மட்டும் நீ வந்து கொன்று விடேன். உனது படைப்புகளுக்கு விரோதமாக நடந்தால் அழிவுகளைச் செய்யும் உன்னால் இந்த வறுமை விலங்கை விரட்டியடிக்க ஒரு வழி செய்ய இயலாதா?”

நான் என்ன செபிக்கிறேனா? இல்லை.
உளறுகிறேனா? இல்லவே இல்லை.
அப்படியானால்...?
கோடான கோடி வறிய மக்களின் அழுகுரலை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கிறேன்.

வறுமையே! மனிதன் படைத்த கொடிய மிருகமே! நீ என்றைக்குச் சாவாய்?


தமிழமுதம்
Thursday, 12 May 2005
posted by Unknown @ 10:05 am   0 comments
வணக்கம்

Name: Unknown
Home:
About Me:
See my complete profile
பதிவுகள்
மாதாந்தப் பதிவுகள்
இணையத் தளங்கள்
More Websites
© 2007 எண்ண முகில்கள் Design by சோழியான்